திரையரங்குகளில் வெற்றிகரமாக கொண்டாடப்பட்ட 'அந்தோனி' திரைப்படம் இப்போது ஒரு புதிய அத்தியாயத்திற்கு தயாராகிறது. உலகெங்கும் உள்ள சினிமா ரசிகர்களின் இல்லங்களை தேடி வரும் இந்தப் படம், முன்னணி OTT தளங்களில் மிக விரைவில் வெளியாகவுள்ளது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எதார்த்தமான கடல் வாழ்வியல் காவியம்...
இயக்குநர்கள் சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஸ்வர் ஆகியோரின் நேர்த்தியான இணை இயக்கத்தில், கலைவளரி சகா, ராமநாதஸ் மற்றும் சுகந்தினி ஆகியோரின் தயாரிப்பில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது. கடலும் கடல் சார்ந்த எளிய மக்களின் வாழ்வியலையும் அவர்களின் உணர்ச்சிப்பூர்வமான பக்கங்களையும் பின்னணியாக கொண்டு மிகவும் எதார்த்தமான பாணியில் செதுக்கப்பட்ட இந்தப் படம், திரையரங்கில் பார்த்தவர்களின் மனதில் ஆழமாக பதிந்துள்ளது.
இசைஞானியின் ஆன்மாவைத் தொடும் இசை...
இந்தத் திரைப்படத்தின் மிகப்பெரிய பலம் — இசைஞானி இளையராஜாவின் ஆன்மாவைத் தொடும் பின்னணி இசையும் பாடல்களும். காட்சிகளுக்கு உயிர் கொடுத்து ரசிகர்களை கதையோடு ஒன்றாக்கும் இந்த இசை, OTT தளங்களிலும் ஒரு தனிவிதமான அனுபவமாக அமையும் என்பதில் ஐயமில்லை.
முன்னணி OTT தளங்களில் ஒரே நேரத்தில்...
Prime Video, OTT Plus, Jio மற்றும் Shortflix என உலகின் முன்னணி OTT தளங்களில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ள 'அந்தோனி', இலங்கை தமிழ் சினிமாவிற்கு ஒரு புதிய மைல்கல்லை நிறுவும் என்று நம்பிக்கையுடன் எதிர்பார்க்கலாம். OTT வெளியீட்டு தேதி மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
'அந்தோனி' படக்குழுவினர் அனைவருக்கும் Thirai Murasu குழுவின் மனமார்ந்த வாழ்த்துக்கள்! இந்தப் படம் OTT தளங்களிலும் புதிய வரவேற்பை பெறட்டும்!

கருத்துக்கள் மற்றும் பகிர்வுகள்