இலங்கைத் தமிழ் சினிமாவின் சர்வதேசப் பயணத்தில் தொடர்ந்து புதிய தளங்களை எட்டிவரும் ‘அந்தோனி’திரைப்படம், தற்போது Indian Film Festival of Melbourne – IFFM 365 ஆண்டு முழுவதுமான திரைப்படத் திட்டத்தின் கீழ் அவுஸ்திரேலியா முழுவதும் ஆன்லைனில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஸ்வர் இணைந்து எழுதி இயக்கியுள்ள இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். கயல் வின்சென்ட், டி.ஜே. பானு, சுதர்சன் ரவீந்திரன் மற்றும் சௌமி முனசின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
IFFM-இன் அதிகாரப்பூர்வ IFFM 365 தளத்தில் ‘அந்தோனி’ தற்போது Tamil திரைப்படமாக பட்டியலிடப்பட்டுள்ளதுடன், 2026 அக்டோபர் 15 முதல் நவம்பர் 14 வரை ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. IFFM 365 என்பது அவுஸ்திரேலியா முழுவதும் பார்வையாளர்கள் ஆன்லைனில், on-demand முறையில் திரைப்படங்களை இலவசமாகப் பார்வையிடும் ஆண்டு முழுவதுமான திட்டமாகும். தளத்தில் இடம்பெறும் அனைத்து திரைப்படங்களுக்கும் ஆங்கில வசன வரிகளும் வழங்கப்படுகின்றன.
யாழ்ப்பாணக் கடலோர வாழ்வியலை மையப்படுத்தும் ‘அந்தோனி’
இலங்கையின் கடலோர வாழ்வியலை பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ‘அந்தோனி’, அமைதியான வாழ்க்கையை விரும்பும் ஒரு மீனவனின் குடும்பம், காதல், பொறுப்பு, கடந்தகாலம் மற்றும் அவனைச் சுற்றி உருவாகும் மோதல்களை மையப்படுத்துகிறது.
படத்தில் கயல் வின்சென்ட் ‘அந்தோனி’ கதாபாத்திரத்திலும், டி.ஜே. பானு ‘நளினி’ கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
அவர்களுடன் சுதர்சன் ரவீந்திரன், சௌமி முனசின், நிழல்கள் ரவி, அருள்தாஸ், அஷானா ஜூலியஸ் கனிஸ்டன், கலைவளரி சக ரமணதாஸ் உள்ளிட்ட பலரும் கதையின் முக்கிய பாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர்.
கடலும் கடலுடன் பிணைந்த மக்களின் அன்றாட வாழ்க்கையும் திரைப்படத்தின் காட்சிமொழியில் முக்கிய இடம் பெறுகின்றன.
இசைஞானி இளையராஜாவின் இசை
‘அந்தோனி’ திரைப்படத்தின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று இசைஞானி இளையராஜாவின் இசை.
இலங்கைத் தமிழ் திரைப்படம் ஒன்றுக்கு இளையராஜா இசையமைத்திருப்பது, படத்தின் தயாரிப்பு கட்டத்திலிருந்தே ‘அந்தோனி’ மீது பரவலான கவனத்தை ஏற்படுத்தியிருந்தது.
திரைப்படத்தின் ஒளிப்பதிவை ரிஷி செல்வம் மேற்கொண்டுள்ளதுடன், படத்தொகுப்பை சுரேஷ் ஏ. பிரசாத்மேற்கொண்டுள்ளார். கலை இயக்கத்தில் மோகன் செல்வராசா பணியாற்றியுள்ளார்.
CALIN Popular Awards 2026-ல் நான்கு விருதுகள்
‘அந்தோனி’ திரைப்படத்தின் 2026ஆம் ஆண்டு பயணத்தில் முக்கியமான அங்கீகாரங்களில் ஒன்றாக CALIN Popular Awards 2026 அமைந்தது.
அவ்விழாவில் ‘அந்தோனி’ திரைப்படம் நான்கு பிரிவுகளில் விருதுகளைப் பெற்று, அந்த ஆண்டில் அதிக விருதுகளைப் பெற்ற இலங்கைத் தமிழ் திரைப்படமாக கவனம் பெற்றது.
திரைப்படம், இயக்கம், நடிகர் மற்றும் நடிகை ஆகிய பிரிவுகளில் கிடைத்த அங்கீகாரங்கள், ‘அந்தோனி’ திரைப்படத்தின் விருது பயணத்தில் முக்கிய கட்டமாக அமைந்தன.
கொழும்பு PVR Cinemas முதல் மெல்பேர்ண் IFFM 365 வரை
சர்வதேச ஆன்லைன் ஸ்ட்ரீமிங்கிற்கு முன்னதாகவும் ‘அந்தோனி’ பல்வேறு திரைப்பட நிகழ்வுகள் மற்றும் சிறப்புத் திரையிடல்களில் பார்வையாளர்களைச் சந்தித்துள்ளது.
WESL Popular Awards Film Festival 2025–2026 நிகழ்வின் ஒரு பகுதியாக, கொழும்பு One Galle Face Mall – PVR Cinemas திரையரங்கிலும் ‘அந்தோனி’ சிறப்புக் காட்சியாக திரையிடப்பட்டது.
திரையரங்கு வெளியீடுகள், விருது நிகழ்வுகள் மற்றும் சிறப்புத் திரையிடல்களைத் தொடர்ந்து தற்போது IFFM 365 மூலம் அவுஸ்திரேலிய பார்வையாளர்களை நேரடியாகச் சென்றடைவது, படத்தின் சர்வதேசப் பயணத்தில் அடுத்த கட்டமாக அமைந்துள்ளது.
99வது Academy Awards தேசியத் தேர்விலும் ‘அந்தோனி’
‘அந்தோனி’ திரைப்படம் 2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 99வது Academy Awards – International Feature Film பிரிவுக்கான இலங்கையின் தேசியத் தேர்வு செயல்முறையிலும் இடம்பெற்றது.
இலங்கையிலிருந்து பரிசீலிக்கப்பட்ட ஆறு திரைப்படங்களில் இடம்பெற்ற ஒரே தமிழ் திரைப்படம் ‘அந்தோனி’ ஆகும். Academy விதிமுறைகளின் அடிப்படையில் தகுதி பெற்ற நான்கு திரைப்படங்களில் ஒன்றாகவும் ‘அந்தோனி’ இடம்பெற்றது.
அந்தத் தேர்வு செயல்முறையின் இறுதியில் ‘Riverstone’ மற்றும் ‘Father’ இறுதிச் சுற்றுக்கு முன்னேறியதுடன், லலித் ரத்நாயக்க இயக்கிய ‘Riverstone’ 99வது Academy Awards-க்கான இலங்கையின் அதிகாரப்பூர்வ International Feature Film சமர்ப்பிப்பாகத் தேர்வு செய்யப்பட்டது.
இதனால் ‘அந்தோனி’ இலங்கையின் அதிகாரப்பூர்வ Oscar submission அல்ல; எனினும் தேசியத் தேர்வில் Academy தகுதி விதிகளை பூர்த்தி செய்த ஒரே இலங்கைத் தமிழ் திரைப்படமாக அதன் பயணம் குறிப்பிடத்தக்கதாக அமைந்தது.
IFFM 365 மூலம் புதிய பார்வையாளர் வட்டம்
Indian Film Festival of Melbourne-ன் IFFM 365 திட்டம், தேர்ந்தெடுக்கப்பட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களை ஆண்டு முழுவதும் அவுஸ்திரேலிய பார்வையாளர்களிடம் கொண்டு செல்லும் ஆன்லைன் திரைப்படத் திட்டமாக செயல்படுகிறது.
தற்போதைய பட்டியலில் ‘அந்தோனி’ தமிழ் திரைப்படமாக இடம்பெற்றுள்ளதுடன், Even, Rangsapara, Mari Aankhothi Jota, Puttannana Katthe, Recoil, Whispers of Analog உள்ளிட்ட பல்வேறு மொழிப் படைப்புகளும் இடம்பெற்றுள்ளன.
ஆங்கில வசன வரிகளுடன் அவுஸ்திரேலியா முழுவதும் கிடைக்கும் இந்த ஸ்ட்ரீமிங் வாய்ப்பு, ‘அந்தோனி’யை தமிழ் மொழிப் பார்வையாளர்களைத் தாண்டிய புதிய பார்வையாளர் வட்டத்திற்கும் கொண்டு செல்லும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது.
திரையரங்கு வெளியீடு, விருதுகள், தேசியத் தேர்வு செயல்முறை மற்றும் சர்வதேச திரைப்படத் தளங்கள் என தனது பயணத்தை தொடர்ந்து விரிவுபடுத்திவரும் ‘அந்தோனி’ திரைப்படத்தின் இயக்குநர்கள் சுகிர்தன் கிறிஸ்துராஜா – ஜெனோசன் ராஜேஸ்வர், இசைஞானி இளையராஜா, தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் முழுத் தொழில்நுட்பக் குழுவினருக்கும் திரைமுரசு ஊடகக் குழுமத்தின் மனமார்ந்த வாழ்த்துகள்!


கருத்துக்கள் மற்றும் பகிர்வுகள்