இலங்கைத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் யாழ்ப்பாணம் 'ராஜா' திரையரங்கில் (Rajah Cinema) வெளியாகி, முதல் நாளிலேயே பார்வையாளர்களின் நெஞ்சங்களைத் தொட்டுள்ள 'பொம்மலாட்டம்'திரைப்படத்திற்குக் கிடைத்துள்ள வரவேற்பு குறித்து படத்தின் இயக்குநர் சசிகரன் யோகேந்திரன் (Sasikaran Yo)தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாகப் பகிர்ந்துள்ளார்.
"இதுவே உண்மையான விருது!"
படம் முடிந்து திரையரங்கை விட்டு வெளியே வந்த மக்கள், இயக்குநரின் கைகளைக் குலுக்கியும், கட்டித் தழுவியும் தங்களின் நெகிழ்ச்சியான அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட தருணங்களைப் புகைப்படங்களாகப் பகிர்ந்துள்ள இயக்குநர் சசிகரன் யோகேந்திரன்:
"4 ஆண்டுகள் உழைப்புக்கான உண்மையான விருது... படம் பார்த்துவிட்டு வெளியே வந்த மக்களின் இந்த உரையாடல்களும், கை குலுக்கல்களும், வாழ்த்துகளும் தான் ஒரு இயக்குநருக்கு மிகப்பெரிய அங்கீகாரம். நன்றி... எங்கள் 'பொம்மலாட்டம்' படத்தை இதயத்தில் ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும்."
எனத் தனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
திரையரங்கில் நெகிழ்ச்சி அலை...
யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கு வளாகத்தில் படம் பார்த்துவிட்டு வந்த ரசிகர்கள், குடும்பங்கள் மற்றும் சினிமா ஆர்வலர்களின் முகங்களில் தெரிந்த மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும், 4 ஆண்டுகால படக்குழுவின் கடின உழைப்பிற்கு கிடைத்த மிக உயரிய பரிசாக அமைந்துள்ளது.
ஒரு சுயாதீனப் படைப்பாளியாகப் பல சவால்களைக் கடந்து உருவாக்கப்பட்டுள்ள 'பொம்மலாட்டம்' திரைப்படம், ஈழத்துச் தமிழ் சினிமாவின் தரமான கதைசொல்லலுக்குச் சிறந்த சான்றாக அமைந்திருப்பதாகத் திரையரங்கை விட்டு வெளியேறிய ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
பார்வையாளர்களின் பேராதரவோடு மாபெரும் வெற்றி கண்ட 'பொம்மலாட்டம்' படக்குழுவினர் அனைவருக்கும் Thirai Murasu குழுவின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!









கருத்துக்கள் மற்றும் பகிர்வுகள்