தாயின் அன்பு, சிறுவயது நினைவுகள், கிராமிய வாழ்வியல் மற்றும் கடந்த காலத்தின் வலிகளை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டுள்ள புதிய இலங்கைத் தமிழ் சுயாதீனப் பாடலான ‘என் அம்மாவும் நானும்’ தற்போது வெளியாகியுள்ளது.
இப்பாடலை அருணன் சுரேந்திரன் எழுதி பாடியுள்ளதுடன், திஷோன் விஜயமோகன் இசையமைத்துள்ளார். Rap Ceylon ஊடாக வெளியிடப்பட்டுள்ள பாடலின் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்புப் பணிகளை டியர் காம்ரேட் மேற்கொண்டுள்ளார்.
தாயும் தாய்மண்ணும் இணையும் நினைவுகள்
“என் அம்மாவும் நானும்… காலையில பழஞ்சோறும்…” என்ற வரிகளுடன் தொடங்கும் பாடல், ஒரு தலைமுறையின் சிறுவயது வாழ்வை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது.
பனைமரங்கள், வயல்வெளிகள், கிராமத்து வீதிகள், கைவிளக்கு வெளிச்சம், அம்மாவின் மடி என தாய்மண்ணுடன் தொடர்புடைய பல நினைவுகளை பாடலின் வரிகளும் காட்சிகளும் பதிவு செய்கின்றன.
நினைவுகளுக்குள் கடந்த காலத்தின் வலியும்
பாடலின் பிற்பகுதியில் அமைதியான சிறுவயது நினைவுகளிலிருந்து மாறி, போரால் பாதிக்கப்பட்ட மக்களின் அனுபவங்களையும் இழப்புகளையும் வரிகள் தொடுகின்றன.
அனைத்தையும் இழந்த பின்னரும் மீண்டும் எழுந்து நிற்கும் ஒரு தலைமுறையின் மனநிலையை “மிச்ச விதைகள் நாங்க இப்ப மரமா முளைச்சோம்” என்ற வரி பிரதிபலிக்கிறது.
இதன் மூலம் தாயின் நினைவுகளை மட்டும் பேசும் பாடலாக அல்லாமல், தாய்மண், இழப்பு, நினைவு மற்றும் மீண்டெழுதல் ஆகிய உணர்வுகளையும் இணைக்கும் படைப்பாக ‘என் அம்மாவும் நானும்’ அமைந்துள்ளது.
தாய்மண்ணின் நினைவுகளையும், தாயின் பாசத்தையும், கடந்த காலத்தின் உணர்வுகளையும் இசை வழியாகப் பதிவு செய்துள்ள அருணன் சுரேந்திரன், திஷோன் விஜயமோகன் மற்றும் முழுப் படைப்புக் குழுவினருக்கும் திரைமுரசு ஊடகக் குழுமத்தின் மனமார்ந்த வாழ்த்துகள்!

கருத்துக்கள் மற்றும் பகிர்வுகள்