THIRAI MURASU | CINEMA NEWS UPDATES

பிரிவுகள்

இருவிழியையே — மெல்லிய காதலால் இதயத்தை வருடும் ஒரு உன்னதக் கவிதை!

16 Jun, 2026

ஒரே நாளில் இரண்டு முற்றிலும் மாறுபட்ட துருவங்களைப் போன்ற பாடல்களை வெளியிட்டு தமிழ் சுயாதீன இசை உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளது யுக்தா புரொடக்ஷன்ஸ். "Loose Loose" பாடலில் அதிரடி, சமூகக் கோபம் என துள்ளல் ரகத்தில் மிரட்டிய அதே தயாரிப்பு நிறுவனம், இன்று வெளியிட்டுள்ள "இருவிழியையே" மூலம் நம்மை அப்படியே ஒரு மென்மையான, அழகான காதல் உலகிற்கு அழைத்துச் செல்கிறது. இது வெறும் Music Video-வாக மட்டுமல்லாமல், கண்களுக்கும் காதுகளுக்கும் ஒரு சேர விருந்தளிக்கும் Visual கவிதையாக உருவாகியுள்ளது.


கதைக்களம் — வரைபடத்தில் தொடங்கும் காதல் காவியம்...

ஒரு ஓவியன் தன் மனதில் தோன்றும் ரசனைமிகு காதலை இயற்கையின் பின்னணியில் எப்படி தேடுகிறான் என்பதுதான் பாடலின் மையக்கருத்து. கதாநாயகன் தன் கேமரா மற்றும் வரைபடக் கருவிகளுடன் கிராமத்து வயல்வெளிகளின் நடுவே நடந்து செல்கிறான். அவன் கற்பனையில் வரைந்த அந்த இருவிழிகள் கொண்ட பெண், குளக்கரையில் வெண்ணிற உடையில் அவனுக்கு முன்னால் வந்து நிற்கும்போது பாடல் ஒரு Magical வடிவத்தை பெறுகிறது. அங்கிருந்து தொடங்கும் இருவரின் காதல் பயணம் பார்ப்பவர்களை புன்னகைக்க வைக்கிறது.


இசை — ஆன்மாவை கொள்ளையடிக்கும் மெலடி...

இசையமைப்பாளர் திலக்ஷன் சிவாவின் இசை இந்த பாடலின் ஆன்மாவாக அமைந்துள்ளது. பாடலின் தொடக்கத்தில் ஒலிக்கும் மென்மையான Guitar மற்றும் Flute இசை நம்மை அறியாமலேயே ஒரு அமைதியான சூழலுக்குள் கொண்டு சேர்க்கிறது. திலக்ஷன் சிவாவின் குரல் மிகவும் லாவகமாகவும் காதலை உள்வாங்கியும் பாடியுள்ளார். குறிப்பாக பல்லவியான "இருவிழியையே இருவிழியையே என் இனியவளே..." என்று வரும் வரிகள் மனதை வருடிச் செல்கின்றன.


ஒளிப்பதிவு — சர்வதேசத் தரம்...

ஜீவராஜின் ஒளிப்பதிவும் Color Grading-உம் சர்வதேசத் தரத்தில் உள்ளது. பச்சைப் பசேலென்ற வயல்வெளிகள், தாமரைக் குளங்கள், பழங்காலத்து சிதைந்த கோட்டை சுவர்கள் என பயன்படுத்தப்பட்ட இடங்கள் ஒவ்வொன்றும் பாடலின் காதல் உணர்வை பலமடங்கு கூட்டுகின்றன. Drone Shots மற்றும் சூரிய அஸ்தமனப் பின்னணியில் காதலர்கள் கைகோர்க்கும் Silhouette காட்சிகள் அற்புதமாக அமைந்துள்ளன. நிவேனின் படத்தொகுப்பும் பாடலின் உணர்வுகளை தடையின்றி பாய விடுகிறது.


நடனம் & ஒளியமைப்பு...

வி.ஜே சுஜியின் நடன இயக்கம் பாடலின் காதல் மனநிலைக்கு ஏற்றவாறு மிகவும் இயல்பாகவும் அழகாகவும் அமைந்துள்ளது. ஜதுசன், தர்சிகா மற்றும் பிரஜுஷாவின் ஒளியமைப்பு பாடலின் காட்சி அழகை மேலும் சிறப்பாக்கியுள்ளது.


வரிகள் — கவித்துவமான காதல் மொழி...

அன்றாட காதல் வரிகளிலிருந்து விலகி, தமிழ் மொழியின் அழகை நயமாக கையாண்டு காதலியை வர்ணித்த விதம் அலாதியானது. "நான் தூங்கும் இரவெல்லாம் உன்னை நெற்றி பிறையாகும்... தேன் கொண்ட சுவையெல்லாம் உன் இதழ் கொண்ட விலையாகும்..." என்ற வரிகள் தமிழ் கவிதை மரபின் செழுமையை உணர்த்துகின்றன.


இயக்கம் & நடிப்பு...

இயக்குனர் ஜதுர்ஷன் சிவா காட்சிகளை எவ்வித அவசரமும் இன்றி மிக நேர்த்தியாகவும் கவித்துவமாகவும் நகர்த்தியுள்ளார். நாயகனாக அணுராஜ் NK-உம், நாயகியாக தயானிகா இளங்கோதரனும் இருவருக்குள்ளும் இருக்கும் Chemistry மிகவும் எதார்த்தமாக அமைந்துள்ளது. கோவில் காட்சியில் இருவரும் சந்திக்கும் இடமும், நாயகி காட்டும் வெட்கப் புன்னகையும் ரசிக்க வைக்கின்றன.


ஒரே நாளில் "Loose Loose" என்ற அதிரடி Modern Track-கையும், "இருவிழியையே" என்ற உன்னதமான Melody Track-கையும் கொடுத்து தங்களின் பன்முகத்தன்மையை நிரூபித்துள்ளது யுக்தா புரொடக்ஷன்ஸ் குழு. மெலடி பாடல்களை விரும்பி கேட்கும் ரசிகர்களின் Playlist-ல் இந்த "இருவிழியையே" நீண்ட நாட்களுக்கு சிம்மாசனம் போட்டு அமரும் என்பதில் ஐயமில்லை! இப்படியொரு உலகத்தரம் வாய்ந்த சுயாதீனப் படைப்பை தந்த ஒட்டுமொத்த குழுவிற்கும் Thirai Murasu தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறது.


கருத்துக்கள் மற்றும் பகிர்வுகள்

உங்கள் கருத்தைப் பகிருங்கள்