வழக்கமான இசைக்கருவிகளைத் தாண்டி, அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் சாதாரண பொருட்களிலிருந்தே இசையை உருவாக்கி தனக்கென தனித்துவமான அடையாளத்தை உருவாக்கி வருகிறார் யாழ்ப்பாணம் பருத்தித்துறையைச் சேர்ந்த 22 வயது இளம் கலைஞர் கிரிஜன் உதயகுமார் (Kirijan Uthayakumar / Rio Musiq).
ரம்பம், தண்ணீர் நிரப்பிய கண்ணாடிகள், பிளாஸ்டிக் போத்தல்கள், ரப்பர் பேண்டுகள், மொபைல் பெட்டி, பென்சில், சீப்பு, ஸ்பேனர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களில் இருந்து இசை மற்றும் மெலடிகளை உருவாக்கும் அவரது முயற்சிகள், சமூக வலைத்தளங்களைக் கடந்து தேசிய மேடைகள் மற்றும் சர்வதேச சாதனை அங்கீகாரங்கள் வரை அவரை அழைத்துச் சென்றுள்ளன.
அன்றாடப் பொருட்களுக்குள் இசையைத் தேடிய பயணம்
முறையான இசைப் பயிற்சி பின்னணி இல்லாத நிலையிலும், கேள்வி ஞானம், தொடர்ச்சியான முயற்சி மற்றும் ஒலிகளின் மீதான ஆர்வம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கிரிஜன் தனது இசைப் பயணத்தை வளர்த்துள்ளார்.
தண்ணீரின் அளவை மாற்றி கண்ணாடிகளில் வெவ்வேறு சுருதிகளை உருவாக்குவது, காற்று நிரப்பப்பட்ட போத்தல்களில் ஒலி எழுப்புவது, ரப்பர் பேண்டுகளை இசைத் தந்திகளாக பயன்படுத்துவது, ரம்பத்தின் அதிர்விலிருந்து மெலடிகளை உருவாக்குவது என சாதாரண பொருட்களை இசைக்கருவிகளாக மாற்றுவதே கிரிஜன் உதயகுமாரின் தனித்துவமான அடையாளமாக மாறியுள்ளது.
‘Sri Lanka’s Got Talent’ தேசிய மேடையில்
கிரிஜனின் திறமைக்கு பரந்த அளவில் அறிமுகத்தை ஏற்படுத்திய முக்கிய மேடைகளில் ஒன்று Sri Lanka’s Got Talent – Season 3.
போட்டியில் Quarter Final சுற்று வரை முன்னேறிய அவர், தண்ணீர் நிரப்பப்பட்ட கண்ணாடிகள் மற்றும் வித்தியாசமான அன்றாடப் பொருட்களைக் கொண்டு இசையை உருவாக்கி தனது தனித்துவமான ஆற்றுகையை வெளிப்படுத்தினார்.
வழக்கமான இசைக்கருவிகளுக்கு மாற்றாக அன்றாடப் பொருட்களை பயன்படுத்திய அவரது இசை அணுகுமுறை, தேசிய தொலைக்காட்சி மேடையிலும் தனித்துவமான கவனத்தைப் பெற்றது.
ஏ.ஆர். ரஹ்மானின் நேரடி பாராட்டு
கிரிஜனின் இசைப் பயணத்தில் குறிப்பிடத்தக்க தருணமாக அமைந்தது இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் (A.R. Rahman) வழங்கிய பாராட்டு.
Rio Musiq வழியாக வெளியிடப்பட்ட அவரது இசை முயற்சிகள் ஏ.ஆர். ரஹ்மானின் கவனத்தை சென்றடைந்ததைத் தொடர்ந்து, கிரிஜனை Video Call மூலம் தொடர்புகொண்ட அவர், அவரது படைப்புகளை பார்த்து வருவதாகக் கூறி ஊக்கப்படுத்தியுள்ளார்.
தனித்துவமான இசை முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுத்து வரும் இளம் கலைஞருக்கு கிடைத்த இந்த நேரடி பாராட்டு, அவரது பயணத்தின் முக்கியமான தருணங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.
Rio Musiq — டிஜிட்டல் தளங்களிலும் வளர்ந்த அடையாளம்
Rio Musiq என்ற பெயரில் YouTube மற்றும் சமூக வலைத்தளங்களில் தனது இசை முயற்சிகளை தொடர்ந்து பகிர்ந்து வரும் கிரிஜனின் வீடியோக்கள் இன்று பரந்த அளவிலான பார்வையாளர்களை சென்றடைந்துள்ளன.
கண்ணாடிகள், போத்தல்கள், ரப்பர் பேண்டுகள், ரம்பம் உள்ளிட்ட பொருட்களில் உருவாக்கப்படும் அவரது குறும்பட இசை வீடியோக்கள் பல மொழி ரசிகர்களிடமும் தொடர்ந்து சென்றடைந்து வருகின்றன.
திரைப்பட இசைத் துறையை நோக்கிய அடுத்த இலக்கு
அன்றாடப் பொருட்களில் இருந்து வித்தியாசமான ஒலிகளை உருவாக்கி வரும் கிரிஜன், தனது இசைப் பயணத்தை எதிர்காலத்தில் திரைப்படத் துறைக்கும் கொண்டு செல்லும் நோக்கத்துடன் உள்ளார்.
திரைப்பட இசையமைப்பாளர், Foley Artist மற்றும் Sound Designer ஆக எதிர்காலத்தில் செயல்பட வேண்டும் என்ற இலக்குடன் பயணித்து வருகிறார்.
அத்துடன், தன்னைப் போன்ற திறமையுள்ள இளம் கலைஞர்களுக்கும் எதிர்காலத்தில் புதிய வாய்ப்புகள் உருவாக வேண்டும் என்ற எண்ணத்தையும் தனது பயணத்துடன் இணைத்துள்ளார்.
கிரிஜன் உதயகுமாரின் சர்வதேச சாதனை அங்கீகாரங்கள்
தனித்துவமான இசைப் பரிசோதனைகளின் தொடர்ச்சியாக, கிரிஜன் பல்வேறு சர்வதேச சாதனை அமைப்புகளின் அங்கீகாரங்களையும் பெற்றுள்ளார்.
International Book of Records
கடந்த 2026 ஜூன் 28 அன்று Hand Saw-ஐ இசைக்கருவியாக பயன்படுத்தி பாடல் ஒன்றை வாசித்ததற்காக,
“YOUNGEST TO PLAY A SONG ON HAND SAW”
என்ற சாதனைப் பிரிவில் International Book of Records அங்கீகாரத்தை கிரிஜன் உதயகுமார் பெற்றுள்ளார். அந்த அமைப்பின் அதிகாரப்பூர்வ பதிவிலும் அவரது பெயர் மற்றும் சாதனை இடம்பெற்றுள்ளது.
Kalam’s World Records
தண்ணீர் நிரப்பப்பட்ட கண்ணாடிகளை சுருதிக்கு ஏற்ப அமைத்து குறுகிய நேரத்தில் இசையை உருவாக்கிய அவரது முயற்சிக்கும் Kalam’s World Records அங்கீகாரம் கிடைத்துள்ளது.
Influencer Book of World Records
நான்கு ரப்பர் பேண்டுகள், ஒரு மொபைல் பெட்டி மற்றும் ஒரு பென்சிலை பயன்படுத்தி ஒரு நிமிடத்திற்குள் அடையாளம் காணக்கூடிய பாடல் மெலடிகளை உருவாக்கிய சாதனைக்காக Music and Innovation பிரிவில் கிரிஜன் பதிவு செய்யப்பட்டுள்ளார்.
ரம்பம் முதல் தண்ணீர்க் கண்ணாடிகள் வரை, சாதாரண பொருட்களுக்குள் இசையைக் கண்டுபிடித்து தனக்கென ஒரு புதிய இசைப் பாதையை உருவாக்கி, தேசிய மேடையிலிருந்து சர்வதேச சாதனை அங்கீகாரங்கள் வரை பயணித்து வரும் கிரிஜன் உதயகுமார் (Rio Musiq) அவர்களின் அடுத்தகட்ட இசைப் பயணமும் கனவுகளும் மேலும் சிறப்பாக அமைய Thirai Murasu ஊடகக் குழுமத்தின் மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்!

கருத்துக்கள் மற்றும் பகிர்வுகள்