வழக்கமான இசைக்கருவிகளைத் தாண்டி, அன்றாடப் பொருட்களை இசைக்கருவிகளாக மாற்றி தனித்துவமான இசை முயற்சிகளை மேற்கொண்டு வரும் இலங்கைத் தமிழ் இளம் கலைஞர் கிரிஜன் உதயகுமார் (Rio Musiq), தனது நான்காவது உலக சாதனை அங்கீகாரத்தை பெற்றுள்ளார்.
தமிழ்நாட்டின் சென்னையில் நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வில், Lincoln Book of Records சார்பில் கிரிஜனுக்கு உலக சாதனைச் சான்றிதழ் வழங்கப்பட்டதுடன், பொன்னாடை போர்த்தியும் கௌரவிக்கப்பட்டார்.
ஒரு நிமிடத்தில் 7 பாடல்கள்
மரம் அறுக்கப் பயன்படுத்தப்படும் ரம்பத்தை இசைக்கருவியாக மாற்றி, ஒரு நிமிடத்திற்குள் எளிதில் அடையாளம் காணக்கூடிய ஏழு பாடல்களின் மெலடிகளை இசைத்த சாதனைக்காக இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இசைக்கருவியாக பொதுவாக பயன்படுத்தப்படாத ஒரு பொருளிலிருந்து பல்வேறு இசை ஒலிகளை உருவாக்கி, குறுகிய நேரத்திற்குள் ஏழு பாடல்களை அடையாளம் காணக்கூடிய வகையில் வாசித்திருப்பது கிரிஜனின் புதிய முயற்சியாக அமைந்துள்ளது.
தொடரும் உலக சாதனைப் பயணம்
யாழ்ப்பாணம் பருத்தித்துறையைச் சேர்ந்த கிரிஜன், Rio Musiq என்ற பெயரில் பல ஆண்டுகளாக வித்தியாசமான இசை முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார்.
ரம்பம், தண்ணீர் நிரப்பிய கண்ணாடிகள், ரப்பர் பேண்டுகள், மொபைல் பெட்டி, பென்சில் உள்ளிட்ட அன்றாடப் பொருட்களை இசைக்கருவிகளாக மாற்றி மெலடிகளை உருவாக்கி வரும் அவரது முயற்சிகள் ஏற்கனவே பல்வேறு சாதனை அங்கீகாரங்களைப் பெற்றுள்ளன.
அந்த தொடர்ச்சியில் தற்போது கிடைத்துள்ள Lincoln Book of Records கௌரவிப்பு, அவரது இசைப் பயணத்தில் நான்காவது உலக சாதனை அங்கீகாரமாக இணைந்துள்ளது.
ஏ.ஆர். ரஹ்மானின் பாராட்டைப் பெற்ற இளம் இசைக் கலைஞர்
கிரிஜனின் வித்தியாசமான இசை முயற்சிகள் முன்னதாக இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் கவனத்தையும் பெற்றிருந்தன. அவரது இசைத் திறமையைப் பாராட்டி ரஹ்மான் வழங்கிய ஊக்கமும் கிரிஜனின் பயணத்தில் குறிப்பிடத்தக்க தருணமாக அமைந்தது.
புதிய ஒலிகள் மற்றும் இசை உருவாக்க முறைகளை தொடர்ந்து ஆராய்ந்து வரும் கிரிஜன், எதிர்காலத்தில் திரைப்பட இசையமைப்பாளர், Foley Artist மற்றும் Sound Designer ஆக செயல்பட வேண்டும் என்ற இலக்குடன் தனது பயணத்தை முன்னெடுத்து வருகிறார்.
தனித்துவமான இசை முயற்சிகளின் மூலம் தொடர்ந்து புதிய அங்கீகாரங்களைப் பெற்று வரும் கிரிஜன் உதயகுமாரின் அடுத்தடுத்த சாதனைகளுக்கும் திரைமுரசு ஊடகக் குழுமத்தின் மனமார்ந்த வாழ்த்துகள்!


கருத்துக்கள் மற்றும் பகிர்வுகள்