ஸீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த வாரம் ஆரம்பமான 'மகா நடிகை — சீசன் 2' நிகழ்ச்சியில், இலங்கையைச் சேர்ந்த நிவேதிகா ராசையா பங்கேற்று தெரிவுச் சுற்றிலேயே நடுவர்களை தன் நடிப்பால் அசரடித்துள்ளார்.
தெரிவுச் சுற்றில் சாதனை...
கடந்த வாரம் இடம்பெற்ற தெரிவுச் சுற்றில், நிவேதிகா தனது அசத்தலான நடிப்பின் மூலம் நடுவர்களை முழுமையாக கவர்ந்து இந்த சீசனின் போட்டியாளர்களில் ஒருவராக தேர்வாகியுள்ளார். பிரபல இயக்குநர் சேரன், நடிகைகளான ராதிகா சரத்குமார் மற்றும் சுவாஸ்திகா ஆகியோர் நடுவர்களாக பங்கேற்ற நிலையில், சிறப்பு விருந்தினராக இயக்குநரும் நடிகருமான மிஸ்கினும் கலந்துகொண்டிருந்தார். இந்த அனுபவமிக்க நடுவர்கள் அனைவரையும் தன் நடிப்பால் கவர்ந்து தேர்வாகியிருப்பது நிவேதிகாவின் சாதனையை மேலும் சிறப்பாக்குகிறது.
இலங்கையின் பெருமை...
கடந்த 'மகா நடிகை' சீசனில் இலங்கையைச் சேர்ந்த கவிப்பிரியா பங்கேற்று மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தார். அந்த பாரம்பரியத்தை தொடர்ந்து, இம்முறை நிவேதிகாவும் ஒவ்வொரு சுற்றிலும் சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்துவார் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
நிவேதிகா ராசையா — யார் இவர்?...
இலங்கையில் பாடல்கள் மற்றும் சில குறும்படங்களில் நடித்து, மொடலிங் துறையில் நீண்ட காலமாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர் நிவேதிகா ராசையா. தற்சமயம் ராஜ் சிவராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் 'போராட்டம்' திரைப்படத்தின் நாயகியாகவும் அவர் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 'மகா நடிகை' மேடை அவரது திரையுலக வாழ்க்கைக்கு மேலும் புதிய வாய்ப்புகளை திறந்துவிடும் என்று நம்பலாம்.
நிவேதிகா ராசையாவிற்கு Thirai Murasu குழுவின் வாழ்த்துக்கள்! 'மகா நடிகை' மேடையில் இலங்கையின் பெருமையை நிலைநாட்டட்டும்!




கருத்துக்கள் மற்றும் பகிர்வுகள்