AVT Production மற்றும் Ceylon Pictures ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் த. அன்பு அவர்களின் கதை மற்றும் இயக்கத்தில் உருவாகும் 'நிலவன்' திரைப்படத்தின் போஸ்டர்களும் தலைப்பும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வந்த நிலையில், தற்போது அனைத்துக் கட்டப் படப்பிடிப்புப் பணிகளும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் பெருமிதத்துடன் அறிவித்துள்ளனர்.
தாயகம் முதல் புலம்பெயர் தேசங்கள் வரை...
இந்தத் திரைப்படம் ஒரு குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த படைப்பாக இல்லாமல் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் கலைச் சொந்தங்களின் கூட்டு உழைப்பில் தயாராகி வருகிறது. யாழ்ப்பாணம், வன்னி மண் (வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி), கிழக்குக் களம் (மட்டக்களப்பு, திருகோணமலை), மலையகம் (ஹற்றன்), கொழும்பு மற்றும் கண்டி ஆகிய இலங்கையின் அனைத்து பிராந்தியங்களிலிருந்தும் கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர். மேலும் நோர்வே, பிரான்ஸ், டென்மார்க் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் தமிழ் திரைக் கலைஞர்கள் ஒன்றிணைந்துள்ளனர்.
படக்குழுவின் நெகிழ்ச்சிப் பதிவு...
"ஒவ்வொரு நகர்விற்குப் பின்னாலும் ஒரு கனவு இருந்தது... ஒவ்வொரு காட்சிக்குப் பின்னாலும் ஒரு போராட்டம் இருந்தது... ஒவ்வொரு இரவிற்குப் பின்னாலும் பல மனிதர்களின் உழைப்பு இருந்தது... இன்று அந்தப் பயணம் படப்பிடிப்புத் தளத்தில் தனது இறுதி நகர்வை முடித்திருக்கிறது. இது முடிவல்ல — இது இன்னொரு புதிய பயணத்தின் தொடக்கம். இனி இந்தப் பயணம் உங்களின் இதயங்களை நோக்கி நகர்கிறது" என படக்குழுவினர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
படைப்பில் பங்களித்தவர்கள்...
கதை & இயக்கம் — த. அன்பு, கதாநாயகன் — ஜெறாட் நோயல், திரைக்கதை — கே.எஸ். வினோத், வசனம், வரித் தயாரிப்பாளர் & படத்தொகுப்பு — எஸ்.ஆர். துசிகரன், இசை — பத்மயன் சிவா, ஒளிப்பதிவு — ரெஜி செல்வராசா, கலை இயக்கம் — டி. திசாந்தன், மேக்கப் & ஆடை வடிவமைப்பு — அகல், ஒளி அமைப்பாளர் — தனோவியன், தயாரிப்பு — AVT Production (ஜெயவவா அன்பு) & Ceylon Pictures.
போஸ்ட் புரொடக்ஷன் தீவிரமாக தொடங்கியது...
தற்போது படத்தொகுப்பு, பின்னணி இசை, ஒலிக்கலவை உள்ளிட்ட Post Production பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தத் திரைப்படம் நடப்பு ஆண்டிலேயே (2026) திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.
இயக்குநர் த. அன்பு, தயாரிப்பாளர் ஜெயவவா அன்பு, AVT Production, Ceylon Pictures மற்றும் 'நிலவன்' படக்குழுவினர் அனைவருக்கும் Thirai Murasu குழுவின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

கருத்துக்கள் மற்றும் பகிர்வுகள்