ஐபிசி தமிழ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், பாஸ்கரன் கந்தையா வழங்க, ராஜ் சிவராஜ் எழுதி இயக்கி, பூவன் மதீசன் இசையமைத்துள்ள ‘போராட்டம்’ திரைப்படம் தற்போது இலங்கையையும் கடந்து பல்வேறு நாடுகளில் திரையிடப்பட்டு வருகிறது.
சுவிட்சர்லாந்திலும் பல நகரங்களில் திரைப்படம் திரையிடப்பட்டுவரும் நிலையில், சுவிஸ் மீடியா சென்டர் ஏற்பாட்டில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் பாஸ்கரன் கந்தையா கலந்துகொண்டு, திரைப்படம் உருவான பின்னணி, தனது மகன் றீகன் கந்தையா கதாநாயகனாக அறிமுகமான விதம், ஆரம்பத்தில் பரிசீலிக்கப்பட்ட ‘மில்லர்’ என்ற தலைப்பு மாற்றப்பட்ட காரணம் மற்றும் இலங்கைத் தமிழ் சினிமாவின் எதிர்காலம் குறித்து விரிவாகப் பேசியுள்ளார்.
“அவருக்காக இந்தக் கதை உருவாக்கப்படவில்லை”
‘போராட்டம்’ திரைப்படத்தில் தனது மகன் றீகனை கதாநாயகனாக அறிமுகப்படுத்த வேண்டும் என்பதே ஆரம்பத் திட்டமாக இருக்கவில்லை என பாஸ்கரன் கந்தையா தெளிவுபடுத்தியுள்ளார்.
கதையும் தயாரிப்பு திட்டங்களும் முடிவடைந்து படப்பிடிப்பை நோக்கி நகர்ந்திருந்த நேரத்தில், கதையின் மையமாக இருக்கும் கால்பந்து வீரர் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான நடிகரை தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டதாக அவர் கூறினார்.
அந்த சூழ்நிலையிலேயே ஏற்கனவே கால்பந்து விளையாட்டில் அனுபவமுள்ள றீகனைப் பரிசீலிக்கலாம் என்ற யோசனை வந்ததாகவும், கதையைப் புரிந்துகொண்ட பின்னரே அவர் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்தார்.
“றீகனுக்காக உருவாக்கப்பட்ட கதை அல்ல இது; சூழ்நிலையே அவரை அந்தக் கதாபாத்திரத்துக்குள் கொண்டு வந்தது.”
யாழ்ப்பாணத்தில் இரண்டு மாதங்கள் களப் பயிற்சி
லண்டனில் வளர்ந்த றீகன், கதாபாத்திரத்தின் வாழ்க்கைச் சூழலை இயல்பாக உள்வாங்க வேண்டும் என்பதற்காக இயக்குநர் ராஜ் சிவராஜ் அவரை யாழ்ப்பாணத்தின் கடலோரப் பகுதிகளில் தங்கவைத்து பயிற்சியளித்ததாக பாஸ்கரன் பகிர்ந்துள்ளார்.
பாசையூர், கரையூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் இரண்டு மாதங்கள் தங்கி அங்குள்ள இளைஞர்களுடன் கால்பந்து விளையாடியதுடன், அவர்களின் பேச்சு வழக்கு, வாழ்க்கை முறை மற்றும் அன்றாட சூழலை நேரடியாக அனுபவித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
அந்த அனுபவம் றீகனின் மனநிலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும், பின்னர் லண்டன் திரும்பிய அவர் தனது உழைப்பில் கிடைத்த 600 முதல் 700 யூரோ வரை பணத்தை அனுப்பி, தன்னுடன் பழகிய சில குழந்தைகளுக்கு காலணிகள் மற்றும் ஆடைகள் வாங்க உதவியதாகவும் பாஸ்கரன் குறிப்பிட்டார்.
தந்தையாக தன்னை நெகிழ வைத்த தருணங்களில் இதுவும் ஒன்று என அவர் தெரிவித்துள்ளார்.
‘மில்லர்’ தலைப்பு ஏன் மாற்றப்பட்டது?
திரைப்படத்திற்கான ஆரம்பப் பெயராக ‘மில்லர்’ பரிசீலிக்கப்பட்டிருந்ததாகவும், அந்தத் தலைப்பு இயக்குநர் ராஜ் சிவராஜ் கதையை எழுதத் தொடங்கிய காலத்திலிருந்தே இடம்பெற்றதாகவும் பாஸ்கரன் தெரிவித்தார்.
ஆனால் பின்னர் அந்தப் பெயர் தொடர்பில் சில எதிர்ப்புகள் எழுந்ததைத் தொடர்ந்து, தேவையற்ற சர்ச்சையைத் தொடராமல் தலைப்பை மாற்ற முடிவு செய்ததாக அவர் விளக்கினார்.
திரைப்படம் தயாரிப்பு நிலை முதல் வெளியீடு வரை பல சவால்களை சந்தித்ததாலும், இறுதியில் படத்தின் மைய உணர்வை பிரதிபலிக்கும் வகையில் ‘போராட்டம்’ என்ற பெயர் தேர்வு செய்யப்பட்டதாக கூறினார்.
இலங்கைத் தமிழ் சினிமாவுக்கு வணிக அடித்தளம் அவசியம்
பத்திரிகையாளர் சந்திப்பில் அதிகம் பேசப்பட்ட மற்றொரு அம்சம் இலங்கைத் தமிழ் சினிமாவின் எதிர்காலம்.
உணர்வுகள் மற்றும் சமூகப் பிரச்சினைகளை மட்டுமே மையப்படுத்தாமல், இளைய தலைமுறையையும் திரையரங்குகளுக்கு அழைக்கும் வகையில் தொழில்நுட்ப ரீதியாகவும் வணிக ரீதியாகவும் திரைப்படங்கள் உருவாக வேண்டும் என பாஸ்கரன் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழ் திரைப்படங்கள் தொடர்ந்து உருவாக வேண்டுமெனில் அவை பார்வையாளர்களை திரையரங்குகளுக்கு கொண்டு வரக்கூடிய பொருளாதார அடித்தளத்தையும் உருவாக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் பார்வையாளர்கள் உள்ளூர் திரைப்படங்களை திரையரங்குகளில் ஆதரிப்பது, இலங்கையில் பணியாற்றும் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்க உதவும் என்றும் அவர் கூறினார்.
சுவிட்சர்லாந்தில் மேலும் திரையிடல்கள்
‘போராட்டம்’ திரைப்படத்தை சுவிட்சர்லாந்தின் பல்வேறு இடங்களிலும் பார்வையாளர்களிடம் கொண்டு செல்லும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கான மேலதிக திரையிடல் அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் மூலம் ‘போராட்டம்’ உருவான பின்னணியை விரிவாகப் பகிர்ந்த பாஸ்கரன் கந்தையா, இயக்குநர் ராஜ் சிவராஜ், நடிகர் றீகன் கந்தையா, இசையமைப்பாளர் பூவன் மதீசன் மற்றும் முழுப் படக்குழுவினரின் தொடர்ந்த திரைப் பயணம் சிறப்பாக அமைய திரைமுரசு ஊடகக் குழுமத்தின் மனமார்ந்த வாழ்த்துகள்!

கருத்துக்கள் மற்றும் பகிர்வுகள்