தமிழிலும் சிங்களத்திலும் ஒரே நேரத்தில் மிகப் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகி வரும் 'ராவண மகன்' / 'வீரா' திரைப்படத்தின் முழுமையான இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தற்போது இனிதே நிறைவடைந்துள்ளது. Good Friends Sign Production Ltd சார்பாக கே. சிவா தயாரிக்கும் இந்தத் திரைப்படத்தை மாஸ்டர் கிருஷ்ணா இயக்கியுள்ளார். இலங்கைத் தமிழ் மற்றும் சிங்களச் சினிமாத் துறையை அடுத்தகட்ட உயர்மட்டத்திற்கு எடுத்துச் செல்லும் இந்தப் படைப்பு குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிகவும் அதிகமாக உள்ளது.
தமிழ்-சிங்கள நட்சத்திரங்களின் புதிய கூட்டணி...
இந்தத் திரைப்படத்தின் மூலம் சிங்களத் திரையுலகின் மறைந்த முன்னணி நட்சத்திர நடிகரான ஜாக்சன் ஆண்டனியின் புதல்வர் அகில தனுத்தர ஆண்டனி தமிழ் சினிமாவில் கதாநாயகனாக பிரம்மாண்டமாக அறிமுகமாகிறார். பிரபல தமிழ் நடிகர் மற்றும் இயக்குநர் லிவிங்ஸ்டனின் புதல்வி ஜோவிதா பிலிப் லிவிங்ஸ்டன் கதாநாயகியாக நடிக்கிறார். சிங்களத் திரையுலகின் மிரட்டல் நடிகர் தசுன் பதிரண வில்லன் கதாபாத்திரத்தில் களமிறங்கியுள்ளார். மேலும் ஜெராட் நோயல், அரவிந்தன், இம்ரான், ருத்ரா, பேர்லிஜா, உமேஷ், பிரவீன் உள்ளிட்ட இலங்கையின் பல திறமையான கலைஞர்களும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கண் கலங்கிய பாடகர் ஆண்டனிதாஸ்...
இந்தத் திரைப்படத்திற்கு சகிஷ்ணா சேவியர் இசையமைக்கிறார். பிரபல பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின் எழுதிய 'மகனுக்குத் தந்தையின் தாலாட்டு' என்ற பின்னணியிலான ஆழமான வரிகளை கண்டு நெகிழ்ந்த பிரபல பின்னணிப் பாடகர் ஆண்டனிதாஸ் பாடலை உருகிப் பாடும்போதே கண் கலங்கியுள்ளார். இந்தப் பாடல் தனது இசைப்பயணத்தில் ஒரு மிகப்பெரிய மைல்கல்லாக அமையும் என அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். மற்றொரு பாடலை பாடலாசிரியர் சதீஷ்காந்த் எழுத சத்ய பிரகாஷ் மற்றும் பிரியங்கா இணைந்து பாடியுள்ளனர்.
அடுத்தடுத்து வரும் அறிவிப்புகள்...
படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில் மிக விரைவில் படத்தின் First Look போஸ்டர்கள், டீஸர், டிரெய்லர் மற்றும் திரையரங்கு வெளியீட்டு திகதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாபெரும் ஆக்ஷன் காவியத்திற்கு Thirai Murasu குழுவின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!





கருத்துக்கள் மற்றும் பகிர்வுகள்