THIRAI MURASU | CINEMA NEWS UPDATES

பிரிவுகள்

மகுடம் சூடிய யாழ்ப்பாணம் & மட்டக்களப்பு அழகிகள்! — `Sri Lankan Upcoming Model 2026` யாழில் கோலாகலமாக நிறைவடைந்தது!

05 Aug, 2026

இலங்கையின் வளர்ந்து வரும் இளம் திறமையாளர்களை ஊக்குவித்து மொடலிங் துறையில் புதிய முகங்களை அடையாளப்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட 'Sri Lankan Upcoming Model 2026' மாபெரும் மொடலிங் அழகன் மற்றும் அழகித் தெரிவுப் போட்டி யாழ்ப்பாணத்தில் மிக விமரிசையாக நிறைவடைந்துள்ளது. யாழ்ப்பாணம் Stylo Rami Model Academy நிறுவனரும் நிகழ்வின் முதன்மை ஏற்பாட்டாளருமான ஹரன் ரம்மின்சன் தலைமையில் யாழ்ப்பாணம் உரும்பிராயில் உள்ள Royal VIP மண்டபத்தில் இந்நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது.


மேடையை அலங்கரித்த 19 இளம் மாடல்கள்...

நாட்டின் பல்வேறு பிராந்தியங்களிலிருந்தும் வருகை தந்த 9 அழகிகளும் 10 அழகன்களும் இறுதிப் போட்டியில் கலந்துகொண்டனர். நவீன மொடலிங் ஆடைகள் மற்றும் பாரம்பரிய ஆடைகளில் மேடையில் வலம் வந்த இவர்களின் மேடை நடை, தன்னம்பிக்கை மற்றும் ஆடை அலங்காரங்கள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தன. மாணவிகளின் எழில்மிகு கலை கலாசார நடன நிகழ்வுகளும் விழாவின் சிறப்பம்சமாக மேடையேற்றப்பட்டன.


வெற்றியாளர்கள்...

நடுவர்களின் இறுதி மதிப்பெண்களின் அடிப்படையில் இரண்டு முக்கிய விருதுகள் வழங்கப்பட்டன. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சியானா 'Sri Lankan Upcoming Model 2026' மகுடத்தை சூடி சிறந்த மாடல் விருதை வென்றார். மட்டக்களப்பைச் சேர்ந்த டிவதர்சினி (தர்சி) ரசிகர்களின் பெரும் ஆதரவுடன் சிறந்த பாப்புலர் விருதை வென்று சாதனை படைத்தார்.


சர்வதேச விருந்தினர்களின் கௌரவிப்பு...

உலக தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின் சர்வதேச தலைவர் டொக்டர் எஸ். எம். ராஷ்மி ரூமி, முன்னணி நடிகர் விஜய் ஆனந்த், டொக்டர் ஏ. ஆர். நிஷா, இந்திய உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் டாக்டர் செண்பகம் ராஜா, ஷர்மிளா செயினுலாப்தீன், ரஞ்சனி சுரேஷ் மற்றும் Tube தமிழ் இலங்கை பணிப்பாளர் தமிழ்க்கொடி திவைனியா உள்ளிட்ட பல்துறைப் பிரபலங்கள் போட்டியாளர்களை நேரில் பாராட்டி கௌரவித்தனர். தமிழகத்திலிருந்து வந்த சிறப்பு விருந்தினர்களுக்கு உலக கலை பண்பாட்டு கலைக்கூடத்தின் இலங்கை பிரதித் தலைவர் ஷேக் அமானி பிரத்யேக நினைவுச் சின்னங்களை வழங்கி கௌரவித்தார்.


இலங்கைத் தமிழ் மொடலிங் துறையை அடுத்தகட்டத்திற்கு நகர்த்திய Stylo Rami Model Academy நிறுவனர் ஹரன் ரம்மின்சன் மற்றும் மகுடம் வென்ற அனைவருக்கும் Thirai Murasu குழுவின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!


















கருத்துக்கள் மற்றும் பகிர்வுகள்

உங்கள் கருத்தைப் பகிருங்கள்