THIRAI MURASU | CINEMA NEWS UPDATES

பிரிவுகள்

1983 கறுப்பு ஜூலையில் படுகொலை செய்யப்பட்ட இயக்குநர் கே. வெங்கட்டின் வாழ்க்கை வரலாறு — `Sunday Sil - Monday Kill` ஆவணப்படத் திரையிடல் இன்று கொழும்பில்!

05 Aug, 2026

இலங்கைச் சினிமா வரலாற்றில் 1960 மற்றும் 1970-ஆம் ஆண்டுகளில் சிங்களத் திரைப்படத் துறையில் மாபெரும் சாதனைகளை படைத்த தமிழ் வம்சாவளி இயக்குநரான கே. வெங்கட் அவர்களின் துயரம் நிறைந்த வாழ்க்கைப் பதிவையும் கலைப் பங்களிப்பையும் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ஆவணப்படம் 'Sunday Sil - Monday Kill: An Eyewitness Account', இன்று கொழும்பு Goethe-Institut Auditorium-ல் திரையிடப்படவுள்ளது. சுபுன் விஸ்வபுத்தி எழுதி இயக்கிய இந்த 45 நிமிட ஆவணப்படம் கெதே நிறுவனத்தின் ஆகஸ்ட் மாத திரைப்பட வட்டத்தின் சார்பில் இன்று மாலை 6.00 மணிக்கு திரையிடப்படவுள்ளது.


யார் இந்த இயக்குநர் கே. வெங்கட்?...

இலங்கைச் சிங்கள சினிமாவில் பன்முகக் கலாசார நல்லிணக்கத்தை தனது திரைப்படங்கள் மூலம் வலியுறுத்திய முன்னோடி இயக்குநர்களில் கே. வெங்கட் முதன்மையானவர். 1966-இல் 'மஹா ரே ஹமு வூ ஸ்த்ரீய' திரைப்படம் மூலம் சிங்களத் திரையுலகில் இயக்குநராக அறிமுகமான அவர், 'உதும் ஸ்த்ரீய', 'அட மெஹெமை', 'கோபாலு ஹண்ட', 'தமயந்தி', 'நிலுகா', 'சிரிபத்துல', 'மகே அம்மா' உள்ளிட்ட 8-க்கும் மேற்பட்ட முக்கிய சிங்களத் திரைப்படங்களை இயக்கி புகழ்பெற்றார். 1978-இல் அவர் இயக்கிய 'சிரிபத்துல' பௌத்த ஆன்மீகக் கருப்பொருளை மையமாகக் கொண்டு உருவாகி பெருவெற்றி பெற்றது.


கறுப்பு ஜூலையின் கொடூர வரலாறு...

1983 ஜூலை இனக்கலவரத்தின் போது வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்த இயக்குநர் கே. வெங்கட் ஆயுதம் ஏந்திய கும்பலால் இடைமறிக்கப்பட்டு தாக்கப்பட்டார். பின்னர் அவர் சென்ற வாகனத்திற்குள்ளேயே உயிருடன் கொடூரமாக எரிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இலங்கை கலைத்துறையில் ஈடுசெய்ய முடியாத மாபெரும் இழப்பாகவும் வரலாற்று வடுவாகவும் இந்நிகழ்வு பதிவாகியுள்ளது.


நிகழ்வு விவரங்கள்...

இன்றைய திரையிடலைத் தொடர்ந்து மூத்த திரைப்பட அமைப்பாளரும் விமர்சகருமான அனோமா ராஜகருணா தலைமையில் சிறப்பு விவாதக் கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளது. நாள் & நேரம் — இன்று (05.08.2026, புதன்கிழமை) மாலை 6.00 மணி, இடம் — Goethe-Institut Auditorium, No. 39, Gregory's Road, Colombo 07.

சினிமா பிரியர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் கலை ஆர்வலர்கள் அனைவரும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆவணப்படத் திரையிடலில் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். 



கருத்துக்கள் மற்றும் பகிர்வுகள்

உங்கள் கருத்தைப் பகிருங்கள்