THIRAI MURASU | CINEMA NEWS UPDATES

பிரிவுகள்

`கடல் எங்கட... வள்ளம் எங்கட!` — `ஆடுகளம்` தேசிய விருது பெற்ற மூத்த நடிகர் V.I.S. ஜெயபாலனின் ஆவேசக் குரலில் `துவக்கு` திரைப்படத்தின் பிரம்மாண்ட டீஸர்!

11 Aug, 2026

இலங்கைத் தமிழ் திரையுலகில் கிராமத்து வாழ்வியல், அதிகாரம், ராணுவக் கட்டுப்பாடு மற்றும் மக்களின் போராட்டப் பின்னணியில் பிரம்மாண்டமாக உருவெடுத்து வரும் 'துவக்கு' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீஸர் இப்போது வெளியாகி சினிமா ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்து வருகிறது. இயக்குநர் தேவ அலோசியஸின் இந்தப் படைப்பு எமது மண் சார்ந்த யதார்த்தத்தையும் மனித உணர்வுகளின் கொந்தளிப்பையும் தத்ரூபமாக வெளிப்படுத்தியுள்ளது.


டீஸர் உணர்த்தும் கதைப் பின்னணி...

டீஸரின் தொடக்கத்தில் பசுமையான கிராமத்தின் இயற்கை எழில், ஏரிக்கரை, தேவாலயத்தில் பிரார்த்தனை செய்யும் பெண்கள் மற்றும் பள்ளிக்கூட அமைதி காட்சியளிக்கிறது. அதேவேளையில் வீதியில் செல்லும் பெரியவரிடம் அடையாள அட்டையை பரிசோதிக்கும் ராணுவ வீரன், சோதனைச் சாவடிகள் என மக்களின் அன்றாட வாழ்வில் நிழலாடும் அதிகாரத்தையும் அச்சத்தையும் காட்சியமைத்துள்ளனர்.


ஆறுகளில் நீராடும் இளைஞர்களின் மகிழ்ச்சி, காதல் தருணங்கள், திருமணச் சடங்குகள் என மக்களின் இயல்பு வாழ்க்கையும் காட்டப்படுகிறது. கதையின் திருப்புமுனையாக ஓடித் தப்பிக்கும் இளைஞர்கள், வெடிகுண்டு வெடிப்புகள், துப்பாக்கிச் சூடு என படத்தின் தீவிரமான அதிரடி உணர்வு வெளிப்படுத்தப்படுகிறது.


எமது ஈழத்துச் சினிமாவுக்குப் பலம் சேர்க்கும் தேசிய விருது பெற்ற நடிகர் V.I.S. ஜெயபாலன்!

இந்தியத் திரையுலகில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'ஆடுகளம்' (2011) திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, தனது முதல் படத்திலேயே மிகச் சிறந்த குணச்சித்திர நடிப்பிற்காக இந்திய தேசியத் திரைப்பட விருதை (National Film Award) வென்ற புகழ்பெற்ற இலங்கை - நார்வேஜிய எழுத்தாளரும், நடிகருமான V.I.S. ஜெயபாலன் (V.I.S. Jayapalan) அவர்கள் தற்போது எமது ஈழத்துத் திரைப்படமான 'துவக்கு' மூலம் மீண்டும் தனது கம்பீரமான குரலாலும் நடிப்பாலும் களம் இறங்கியுள்ளார்.


சர்வதேச அரங்கிலும் இந்திய சினிமாவிலும் தனக்கெனத் தனி அடையாளம் பதித்த ஒரு மூத்த ஆளுமை, எமது உள்ளூர் மண்ணின் படைப்பில் இணைந்து முழு ஆதரவை வழங்கி நடித்திருப்பது இலங்கைத் தமிழ் சினிமா உலகிற்குப் பெரும் பெருமிதத்தையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது!


மறக்க முடியாத வசனம்...

டீஸரின் இறுதியில், கடற்கரையில் கம்பீரமான தோற்றத்தில் அமர்ந்து மூத்த நடிகர் V.I.S. ஜெயபாலன் பேசும் ஆவேசமான வசனம் தான் முழு வீடியோவிற்கும் மாஸ் எனர்ஜியைக் கொடுக்கிறது — "பயம்... எல்லாத்துக்கும் பயம்! கடல் எங்கட... வள்ளம் எங்கட... வலையும் எங்கட... அப்புறம் என்ன மசருக்கடா பயம்? சாவு பயந்தவங்க எல்லாம் ஓடிப் போங்கடா! மத்தவங்க எல்லாம் என்னோட வரட்டும்!" எமது மண்ணையும் வாழ்வாதாரத்தையும் காப்பாற்றத் துணியும் எளிய மக்களின் துணிச்சலை ஜெயபாலன் அவர்களின் குரல் அப்படியே பிரதிபலிக்கிறது.


இத்திரைப்படம் எமது கிராமப்புற மக்களின் இயல்பு வாழ்க்கை, அடக்குமுறைகள் மற்றும் தமது மண் சார்ந்த உரிமைகளுக்காக எளிய மனிதர்கள் மேற்கொள்ளும் போராட்டப் பாதையை மையமாகக் கொண்ட உணர்வுப்பூர்வமான ஆக்சன் டிராமாவாக அமையவுள்ளது. 2026-ல் திரையரங்குகளில் வெளியாகவுள்ள 'துவக்கு' படக்குழுவினர் மற்றும் இயக்குநர் தேவ அலோசியஸ் அவர்களுக்கு Thirai Murasu குழுவின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

கருத்துக்கள் மற்றும் பகிர்வுகள்

உங்கள் கருத்தைப் பகிருங்கள்