THIRAI MURASU | CINEMA NEWS UPDATES

பிரிவுகள்

தமிழ் – சிங்களம் என இருமொழிகளில் தயாராகும் ‘TVK’ — சிங்கள திரைக்கதைத் தழுவல் மற்றும் பாடல் வரிகளை நிறைவு செய்த கிருஷ்ணன் ஹமீஷா தேவி!

20 Aug, 2026

‘தி மாதர்’ (The Maadhar) திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பிரவீன் கிருஷ்ணராஜா (Praveen Krishnaraja) இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘TVK’.


தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் பார்வையாளர்களைச் சென்றடையும் வகையில் தயாராகி வரும் இப்படத்தின் சிங்கள திரைக்கதைத் தழுவல் (Sinhala Script Adaptation) மற்றும் பாடல்களுக்கான சிங்கள வரிகள் எழுதும் பணிகளை நிறைவு செய்துள்ளதாக கிருஷ்ணன் ஹமீஷா தேவி (Krishnan Hameesha Devi) தெரிவித்துள்ளார்.


நேரடி மொழிபெயர்ப்பைத் தாண்டிய தழுவல்


இது தொடர்பாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள ஹமீஷா தேவி, தமிழ் திரைக்கதையை வெறுமனே சிங்களத்திற்கு நேரடியாக மொழிபெயர்ப்பதை விட, கதையின் அடிப்படை உணர்வு மற்றும் கருத்தைத் தக்கவைத்துக்கொண்டு சிங்கள மொழி மற்றும் கலாசாரச் சூழலுக்கு இயல்பாகப் பொருந்தும் வகையில் திரைக்கதை தழுவப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.


அத்துடன், திரைப்படத்தில் இடம்பெறும் பாடல்களுக்கான சிங்கள வரிகளையும் அவர் எழுதியுள்ளார்.


“திரைப்படத்தின் மூலக் கருத்தையும் உணர்வையும் பாதுகாத்து, கலாசார ரீதியாகப் பொருந்தக்கூடிய சிங்களத் தழுவலை உருவாக்குவதே எனது நோக்கமாக இருந்தது.”


என தனது பணியின் அணுகுமுறை குறித்து அவர் தெரிவித்துள்ளார்.


சிங்களத்தில் பாடும் கிரிஷ் மனோஜ்


இந்த இருமொழிப் படைப்பின் மற்றுமொரு சிறப்பம்சமாக, பாடகர் கிரிஷ் மனோஜ் (Krish Manoj)இப்படத்திற்காக முதன்முறையாக சிங்கள மொழியில் பாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழில் தனது இசைப் பயணத்தை முன்னெடுத்து வரும் கிரிஷ் மனோஜ், ‘TVK’ மூலம் சிங்களப் பாடலிலும் குரல் பதிவு செய்திருப்பது படத்தின் பன்மொழி முயற்சியின் குறிப்பிடத்தக்க அம்சமாக அமைந்துள்ளது.


இருமொழிப் பார்வையாளர்களை நோக்கி ‘TVK’


தமிழ் மற்றும் சிங்களம் என இரு மொழிகளிலும் திரைப்படத்தை இயல்பாகக் கொண்டு செல்வதற்காக திரைக்கதை, வசனங்கள் மற்றும் பாடல் வரிகள் உள்ளிட்ட மொழிசார் பணிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன் மூலம் ஒரு மொழியில் உருவான படைப்பை மற்றொரு மொழிக்கு மாற்றுவது மட்டுமின்றி, இரு மொழிப் பார்வையாளர்களும் கதையுடனும் அதன் உணர்வுகளுடனும் இயல்பாக தொடர்புபடுத்திக்கொள்ளும் வகையிலான திரைப்பட அனுபவத்தை உருவாக்குவதே ‘TVK’ குழுவின் முயற்சியாக உள்ளது.



இலங்கைத் திரைப்படத் துறையில் மொழிகளைக் கடந்து பார்வையாளர்களைச் சென்றடையும் முயற்சியாக உருவாகி வரும் ‘TVK’ திரைப்படத்தின் இயக்குநர் பிரவீன் கிருஷ்ணராஜா, கிருஷ்ணன் ஹமீஷா தேவி, கிரிஷ் மனோஜ் மற்றும் படக்குழுவினருக்கு Thirai Murasu குழுவின் வாழ்த்துக்கள்.

கருத்துக்கள் மற்றும் பகிர்வுகள்

உங்கள் கருத்தைப் பகிருங்கள்