43 வருடங்களாக புதைக்கப்பட்ட வரலாற்று உண்மைகளை திரையில் கொண்டுவர ஒரு துணிச்சலான படைப்பு தயாரானது. Snap Studios Srilanka தயாரிப்பில், இலங்கை தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் தொட அஞ்சிய 1983 ஜூலை கலவரப் பின்னணியை மையமாக கொண்டு உருவாகியுள்ள "வன்செயல் 1983" (Silence They Demand) குறுந்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் இப்போது வெளியாகி இணையத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
43 வருடங்களுக்கு முந்தைய வரலாற்று வடு...
டீசர் தொடங்கும் போதே 1983 ஜூலை கொழும்பில் நிலவிய அசாதாரணமான சூழலை வானொலிச் செய்தி மூலம் விவரிக்கும் காட்சி நம்மை நேரடியாக அந்த காலகட்டத்திற்கே அழைத்துச் செல்கிறது. அப்போதைய இலங்கை அதிபர் ஜே.ஆர். ஜெயவர்த்தன London Daily Telegraph இதழுக்கு அளித்த சர்ச்சைமிக்க வார்த்தைகள் திரையில் தோன்றும் தருணம் — நம் நெஞ்சை கனக்க வைக்கிறது. "இன்னொரு 40 வருஷம் கழிச்சு இதைக் கலவரம்னு முத்திரை குத்தி நம்மளையும் நம்ப வச்சிருவாங்க..." என்ற இறுதி வசனம் வரலாற்றின் மௌனங்கள் எப்படி திணிக்கப்படுகின்றன என்பதை ஆழமாக உணர்த்துகிறது.
காட்சி அமைப்பும் இசையும்...
இயக்குநர் UR. பவித்திரனின் நேர்த்தியான எழுத்து மற்றும் இயக்கத்தில் இத்திரைப்படம் வெறும் பொழுதுபோக்காக இல்லாமல் வரலாற்றின் சாட்சியாக உருவாகியுள்ளது என்பது ஒவ்வொரு பிரேமிலும் தெரிகிறது. டான் மைனரின் Dark Theme ஒளிப்பதிவும் கச்சிதமான எடிட்டிங்கும் 80-களின் கொழும்பை அப்படியே கண்முன்னே கொண்டு நிறுத்துகிறது. கருண் ஜெய்யின் இதயத் துடிப்பை எகிற வைக்கும் BGM படத்திற்கான எதிர்பார்ப்பை பலமடங்கு உயர்த்தியுள்ளது.
நடிப்பு...
மிதுர்ஷன் ஜெயவீரசிங்கம் மற்றும் ஹரிப்ரியன் தேவ் ஆகியோரின் கதாபாத்திரத் தோற்றங்களும் அவர்களின் கண்கள் காட்டும் தீவிரமும் இலங்கை தமிழர்களின் வாழ்வியல் வலியை துல்லியமாக பிரதிபலிக்கின்றன.
வரலாற்றின் மௌனங்களை கலைக்க வரும் "வன்செயல் 1983" படக்குழுவினர் அனைவருக்கும் Thirai Murasu குழுவின் வாழ்த்துக்களும் பாராட்டுகளும்!

கருத்துக்கள் மற்றும் பகிர்வுகள்