இலங்கை இசைத்துறையின் மிக முக்கியமான குரல்களில் ஒருவராகப் பல தசாப்தங்களாகத் தனித்துவமான அடையாளத்தைப் பதித்த மூத்த பாடகி விஷாரத கலாநிதி நந்தா மாலினி (Visharada Dr. Nanda Malini) மறைந்த நிலையில், அவரது இறுதிச் சடங்குகள் தொடர்பான விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பேராசிரியர் சுனில் ஆரியரத்ன (Prof. Sunil Ariyaratne) வெளியிட்ட தகவலின்படி, நந்தா மாலினியின் இறுதிச் சடங்குகள் ஆகஸ்ட் 22, சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு கொழும்பு பொரளை பொது மயானத்தில் நடைபெறவுள்ளன.
பொதுமக்கள் இறுதி அஞ்சலி
நந்தா மாலினியின் பூதவுடல் இன்று ஆகஸ்ட் 21 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல், நுகேகொட, நாவல வீதி, விஜயபா மாவத்தையில் அமைந்துள்ள நந்தா மாலினி இசை ஆசிரமத்தில் பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.
ஆகஸ்ட் 22 சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணி வரை பொதுமக்கள், கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் அங்கு இறுதி மரியாதை செலுத்த முடியும். அதனைத் தொடர்ந்து பூதவுடல் பொரளை பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, மாலை 5.00 மணிக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன.
நந்தா மாலினியின் இறுதி விருப்பத்தின்படி எளிமையான பிரியாவிடை
தனது இறுதிச் சடங்குகள் ஆடம்பரமின்றி மிகவும் எளிமையாக நடைபெற வேண்டும் என்பது நந்தா மாலினியின் விருப்பமாக இருந்ததாக பேராசிரியர் சுனில் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
அதன்படி, அவமங்கலச் சபை, நினைவுரைகள் மற்றும் இரங்கல் செய்திகளை வாசிக்கும் நிகழ்வுகள் இன்றி, அவரது விருப்பத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் இறுதி நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
மூன்று நாள் தேசிய துக்க காலம்
நந்தா மாலினியின் மறைவையொட்டி ஆகஸ்ட் 21, 22 மற்றும் 23 ஆகிய மூன்று நாட்களையும் தேசிய துக்க தினங்களாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. இலங்கை இசை மற்றும் கலாசாரத் துறைக்கு அவர் ஆற்றிய நீண்டகாலப் பங்களிப்பை நினைவுகூரும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பல தலைமுறைகளின் இசை ரசனையிலும் இலங்கையின் கலாசாரப் பயணத்திலும் தனித்துவமான தடத்தைப் பதித்த விஷாரத நந்தா மாலினியின் மறைவு இலங்கை இசைத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
அன்னாரின் மறைவுக்கு Thirai Murasu ஊடகக் குழுமம் தனது ஆழ்ந்த இரங்கலையும் அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறது.

கருத்துக்கள் மற்றும் பகிர்வுகள்